ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விகிதம் குறைந்தால் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை ஆகியப் பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை மானிய விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொருட்கள் வாங்காத அட்டைதாரர்கள் பெயரில் பொருட்கள் வாங்கியது போல பதிவு செய்து கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.
இது குறித்து அதிகாரிகள் கடையில் ஆய்வுக்கு வரும் போது பொருட்களின் இருப்பு விகிதம் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த அபராதத் தொகை பொருட்களின் விலை வெளிச்சந்தைகளின் மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல பதிவேட்டில் உள்ள அளவை விட அதிகமாக பொருட்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசுக்கு ஏற்படும் இழப்புகளை அபராதம் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும் எனவும் மேலும் குற்றம் நிரூபிக்கப்படும் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது