பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் கரூரை சேர்ந்த 3 பேருக்கு இழப்பீடு வழங்க சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இசை நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய தொகையை ஏ.சி.டி.சி., ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருப்பித் தரவில்லை என கரூரைச் சேர்ந்த 3 பேர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் பாரி மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி, 3 பேருக்கும் சேவை குறைபாட்டுக்காக, 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாயும் வழங்க ஏ.சி.டி.சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.