நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆடை கட்டுப்பாடு குறித்து தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில், தேர்வு கட்டுப்பாடு குறித்து தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மாணவர்கள் மதியம் 12 மணிக்கு வந்துவிட வேண்டும் எனவும், அனைத்து மாணவர்களும் கடும் சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
முழுக்கை ஆடை அணிந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை எனவும், எனவே, அரைக்கை சட்டை அணிந்து வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஷூ மற்றும் ஹீல்ஸ் வைத்துள்ள செருப்பு அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என்றும், எனவே, ஹீல்ஸ் இல்லாத செருப்பு மற்றும் ஷூ அணிந்து வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோக பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.