பெண் காவலரை அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தேனியில் அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறியதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரை கோவை அழைத்து வந்த போலீசார், முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சவுக்கு சங்கரை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், போலீசார் தேனியில் சவுக்கு சங்கரைக் கைது செய்ய சென்றபோது, அவரது காரில் 500 கிராம் கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கஞ்சா, கார், லேப்டாப், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சவுக்கு சங்கர், அவரது ஓட்டுநர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.