நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் என்பவர், காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில், நேற்று ஜெயக்குமார் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.