நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறுதியாக தனது மருமகன் ஜெபாவிற்கு எழுதிய கடிதம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் என்பவர், காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில், நேற்று ஜெயக்குமார் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், யார், யாருக்கெல்லாம் பணப்பரிமாற்றம் செய்தார் என்ற விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் ஒப்பந்தம் எடுத்து வீடு கட்டிக் கொடுத்தவர்கள் தர வேண்டிய நிலுவைத் தொகையைக் குறிப்பிட்டுள்ள அவர், அதனை வசூல் செய்து குடும்பத்தினருக்கு கொடுக்குமாறும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதம் கடந்த 27-ம் தேதி தேதியிட்டு எழுதப்பட்டுள்ளது. இதேபோல், 30-ம் தேதி தேதியிட்டு தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதத்தை ஜெயக்குமார் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரையும் பழி வாங்க வேண்டாம் எனவும், சட்டம் தனது கடமையை செய்யும் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 2 கடிதங்களையும் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.