கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய திருப்புமுனையாக குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் 3 இந்தியர்களைக் கனடா காவல்துறை கைது செய்திருக்கிறது. யார் இவர்கள் ? என்ன பின்னணி ? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்…
இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியும், குருநானக் சீக்கிய குருத்வாரா சாகிப்பின் தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எதிர்பாராத திருப்பமாக , நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி , கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
எனினும் அவரது குற்றச் சாட்டுக்கள் அடிப்படை அற்றது .உள்நோக்கம் கொண்டது என இந்திய திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. கனடாவில் இயங்கும் இந்திய பிரிவினை மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்தியது.
இதற்கு தொடர்ந்து இருநாட்டு அரசு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. பரஸ்பரம் இருநாட்டு தூதர்களும் வெளியேற்றப்பட்டனர். கனடா நாட்டவர்களுக்கு இந்தியாவில், விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டு, பிறகு மீண்டும் விசா அனுமதிக்கப்பட்டது.
இந்திய அரசின் உத்தரவின் பேரில்தான் நிஜ்ஜார் கொல்லப்பட்டார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் இதுவரை கனடா அரசு காட்டவில்லை.
அண்மையில் டொரோண்டோ நகரில் நடந்த சீக்கிய தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,இந்தியாவில் சீக்கிய உரிமைகளுக்கு தனது அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
மேலும் அந்நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களும் , இந்தியப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஆகியோரை நிஜ்ஜார் கொலையாளிகளாக சித்தரித்து பதாகைகள் ஏந்தியும் பாலர் வந்திருந்தனர். உடனடியாக, இந்தியாவுக்கான கனடா தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கடுமையாக கண்டித்தது.
இந்நிலையில் தான், நிஜ்ஜார் கொலையில் தொடர்பிருப்பதாக கமல்ப்ரீத் சிங், கரன்ப்ரீத் சிங் மற்றும் கரண் பிரார் ஆகிய 3 இந்தியர்களைக் கைது செய்துள்ள கனடா காவல் துறை, அவர்கள் மீது கொலை, கொலைக்கு சதி திட்டம் தீட்டுதல், ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டு மாகாணங்களில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த கைது நடந்துள்ளது.
கைது செய்யப் பட்டுள்ள மூவரும் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவுக்கு மாணவர் விசாவைப் பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் மூலம் வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
கனடாவுக்கு வந்த பிறகு எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் அவர்கள் சேரவில்லை, மேலும் அவர்கள் மூவரும் கனடாவில் வசிக்க குடியுரிமை அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே எட்மண்டனில் 11 வயது சிறுவனை சுட்டுக் கொன்றது உட்பட குறைந்தது மூன்று கொலை வழக்குகளில் மூவருக்கும் தொடர்பு இருக்கலாம் என கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. இம்மூவரும் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் உடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்தவர்கள் தெரியவருகிறது.
லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி ப்ரார் உள்ளிட்ட தாதாக்களுக்கும் தடைசெய்யப்பட்ட பாபர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) உட்பட பல காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பான NIA ஏற்கனவே தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி ப்ரார் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 12 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட குற்றவியல் சதி செய்ததாக அவர்கள் மீது என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் ,கனடா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் என்ஐஏ தெரிவித்தது.
காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாரின் கொலை, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு இடையேயான குழு மோதலின் விளைவாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ அரசு கூறுவது போல் இந்திய அரசுக்கும் நிஜ்ஜார் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்ல அவர்கள் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்று செய்தி வெளியிட்ட CBC ஊடகம் , அதற்கான எந்த ஆதாரத்தையும் மேற்கோள் காட்டவில்லை.