சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை இ -பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இ-பாஸ் பெறும் வழிகாட்டு நெறிமுறைகளை திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுள்ளனர்.
அந்த வகையில், “முதலில் epass.tnega.org என்ற இணைய முகவரிக்கு சென்று வாகனங்களுக்கு இ – பாஸ் பெற விண்ணபிக்க வேண்டும்” எனவும், “சுற்றுலா செல்லும் நபர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், செல் எண் மூலமும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் இ-மெயில் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
“விண்ணப்பிக்கும்போது, பெயர், முகவரி, செல்போன் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்களா அல்லது வெளி மாநிலத்தில் இருந்து வருகிறார்களா” என்பதை தெரிவிக்கவேண்டும்.
மேலும், “மொத்தம் பயணம் செய்பவர்கள் விவரம் மற்றும் இரண்டு சக்கர வாகனம், கார், பைக், வேன், பேருந்து என எதில் பயணம் செய்கிறோம், வாகனம் உற்பத்தி செய்த ஆண்டு, அந்த வாகனம், பெட்ரோல் அல்லது டீசல் எதில் இயங்குகிறது என்பது உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்து சமர்பித்தால் இ-பாஸ் கிடைத்துவிடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.