கரூர் மாவட்ட பாஜக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக, கரூர் மாவட்ட பாஜக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது.
கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை மாவட்ட பாஜக தலைவரும் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர், பனை நுங்கு ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.