கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் , குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும். சொத்து, வீடு, வாகனங்களுடன் நிம்மதியாக வாழ வேண்டும். இதற்காக தானேஎல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். எளிதாக இவை எல்லாம் கிடைக்க ஒரு பரிகாரத் திருக்கோயில் இருக்கிறது. அது என்ன கோயில்?, என்ன சிறப்பு?, என்பது பற்றி தான் இந்த செய்தி தொகுப்பு.
உலகிலேயே மிகப்பெரிய சன்னதி தெரு உள்ள ஒரே கோயில் என்ற பெருமை உடையது திருச்செந்தூர் திருக்கோயில். இது, மயிலேறும் பெருமாளாக போற்றப்படும் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாகும்.
மற்ற படைவீடுகள் மலைக் கோயிலாக இருக்க, இது மட்டும் கடற்கரை கோயிலாக உள்ளது. ஆதிகாலத்தில் இது சந்தனமலையாக இருந்தது என்று புராணங்கள் சொல்லுகின்றன.
சங்க இலக்கியங்களில் முதல் நூலான நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படை நூலில் இந்தக் கோயிலின் பெருமை பேசப்படுகிறது. இதிலிருந்தே இந்தக் கோயிலின் தொன்மை புரியும்.
காலப்போக்கில் உப்பு நிறைந்த கடல் காற்றின் விளைவாக கோயில் கட்டுமானம் பழுதடைய தொடங்கியது.
மௌன சுவாமி, காசி சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், தேசிக மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் 72 ஆண்டுகள் தொடர்ந்து திருப்பணிகள் செய்து ,1941- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவர்கள் செய்த புண்ணியத்தால் தான் நாம் இன்று இந்த கோயிலை தரிசித்து மகிழ்கிறோம்.
கந்தபுராணத்தின் படி, சூரபத்மன் முதலான அசுரர்களின் கொடுமையால் தேவர்கள் சிவபெருமானிடம் வேண்ட, தேவர்களைக் காப்பதற்காக , சிவபெருமான் தன் கண்களில் இருந்து நெருப்புப் பொறியாக முருகப்பெருமானைத் தோன்ற வைத்தார்.
தேவர்களுக்கு சேனாதிபதியாக படை நடத்தி, போர் புரிய முருக பெருமான் தங்கியிருந்த படை வீடே திருச்செந்தூர்.
போரில் சூரனை சம்ஹாரம் செய்து வாகை சூடி நின்ற முருகன் ஜெயந்திநாதர் என்று போற்றப் பட்டார். காலப் போக்கில் அதுவே செந்தில் நாதன் என்று மாறியது.
திருஜெயந்திபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் இப்போது திருசெந்தூர் என்று அழைக்கப் படுகிறது. திருச்சீரலைவாய் என்னும் பெயரும் இக்கோயிலுக்கு உண்டு.
உயரமான திருச்செந்தூர் கோயிலின் பிரம்மாண்டமான ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் 150 அடிகள் உயரம் கொண்டதாக விளங்குகிறது.
மூலவர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி தலையில் ஜடா மகுடமும் , வலது கரத்தில் தாமரை மலருடன் சிவபூஜை செய்யும் தவக் கோலத்தில் ஒரு சிவயோகியாக அருள் பாலிக்கிறார். கருவறையில் பின்புற இடது சுவற்றில் சிவலிங்கம் இருக்கிறது.
சிவபூபூஜை செய்யும் கோலத்தில் இருப்பதால், இந்த கருவறைக்கு பிரகாரம் கிடையாது. உற்சவராக ஸ்ரீ சண்முகர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார்.
மூலவருக்கான எல்லா பூஜைகளும் இவருக்கு உண்டு. கருவறைக்குப் பின்னால் பஞ்சலிங்கம் இருப்பது போலவே ஸ்ரீ சண்முகருக்குப் பின்னாலும் சிவலிங்கம் உள்ளது.
பொதுவாக எல்லாத் திருக்கோயில்களிலும் ஒரு உற்சவர் தான் உண்டு. ஆனால் திருச்செந்தூரில் ஸ்ரீ சண்முகர்,ஸ்ரீ ஜெயந்திநாதர், ஸ்ரீ அலைவாய் பெருமான், மற்றும் ஸ்ரீ குமார விடங்கர் என்று நான்கு உற்சவர்கள் உண்டு. இங்கே மூலவருக்கு எதிரே இரண்டு மயில்கள் இருக்கின்றன.
கோயிலை சுற்றி வந்தால் வடக்கு பகுதியில் வள்ளிக்குகை அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரம் முடித்த பின் சினம் தணிக்க நெடுவேலால் தரையில் குத்த நல்ல தண்ணீர் பீறிட்டு வந்தது.
அதுவே கடற்கரை அருகே நாழிக் கிணறானது என்கிறார்கள். சூரபதுமனுடனான போரின் போது திருச்செந்தூரில் முகாமிட்டு தங்கியிருந்த போர் வீரர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக முருகன் தனது வேலால் இந்த கிணறை உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய திருவிழாவாக தைப் பூசம்,வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா,மாசி திருவிழா சிறப்பாக கந்த சஷ்டி விழா உட்பட மற்ற இந்து பண்டிகைகளின்போது சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோயில் அதிகாலை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் திருச்செந்தூர் திருக்கோயிலில் தினமும் 9 கால பூஜை நடைபெறுவது சிறப்பு.
முக்கியமாக ,உச்சிக்கால பூஜை முடிந்த பின், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஒரு பாத்திரத்தில் பால்,மற்றும் அன்னம் நைவேத்யமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இந்த கங்கை பூஜை நாள்தோறும் நடைபெறுகிறது .
ஆண்டுதோறும் இத் திருக்கோயிலில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் புத்தாடை சார்த்தி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த திருச்செந்தூர் திருக்கோயில் மிகச் சிறந்த குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இந்தக் கோயிலில் கூர்மம் ,அஷ்டநாகங்கள், அஷ்ட யானைகள், மேருமலை ஆகிய நான்கு பீடங்களில் வீற்றிருக்கும் மேதா தக்ஷணா மூர்த்தி, ஞானஸ்கந்த மூர்த்தி எனப் போற்றப்படுகிறார்.
இவருக்குப் பின்னல் இருக்கும் கல்லால மரத்தில் 4 வேதங்களும் கிளிகளாக, விளங்குகின்றன.
வழக்கமாக, அக்னி, உடுக்கை ஏந்தியிருக்கும் தக்ஷணா மூர்த்தி, திருச்செந்தூரில் மட்டும் கையில் மான் மழு ஏந்தி அருள்புரிகிறார்.
ஆகவே, பக்தியுடன் சஷ்டி விரதமிருந்து, திருச்செந்தூருக்கு வந்து, ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால், திருமணம் சிறப்பாக நடைபெற்று, குழந்தை பாக்கியம் நிச்சயம் ஏற்படும் என்று நம்ப படுகிறது.
அருணகிரிநாதர், ஆதி சங்கரர், குமரகுருபரர் என அருளாளர்கள் எல்லாம் போற்றி பரவிய திருச்செந்தூர் முருகப் பெருமானை விபூதி அபிஷேகம் செய்து வணங்குவோர்க்கு, மனக்கவலைகள் எல்லாம் தீர்ந்து வாழ்க்கை செழிப்படையும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.