தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில், விழுப்புரம் நகரப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளான ராம்பாக்கம், சிறுவந்தாடு, கோலியனூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் கனமழை காரணமாக கோடை வெயிலின் தாக்கத்தால் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேலூரில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக 105 டிகிரியைத் தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் காட்பாடி, வேலூர் புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, விருபாட்சிபுரம், அடுக்கம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கோடை மழை பெய்தது. இதனையடுத்து ரெட்டணை கிராமத்தில் இருந்து திண்டிவனம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒழுகியதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். பேருந்தை சீரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.