காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சு உள்ளிட்டவற்றால்தான், காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போலவும், தெற்கில் உள்ள மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த நிறவெறி கருத்துக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மனநிலையும், சிந்தனையும், இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் தேசம் என்றும், தாங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் சந்ததியினர் என்றே நம்புகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆப்பிரிக்கர் அல்லது சீனர்களைப் போல பார்ப்பதில் தவறில்லை எனவும், இதன் உட்பொருள் நாம் இந்த மக்களின் சந்ததியினர் என்பதுதான் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நாட்டிற்கு வெளியே எஜமானர்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே, நம்மை ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள் என்று சொல்லும் அளவிற்கு செல்ல முடியும் எனவும் அவர் சாடினார்.
இதனால்தான் காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.