தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10-ம்வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள், வரும் 10-ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை, 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த, 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதினர்.
அவற்றில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பேர் மாணவிகள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள் மற்றும் 235 சிறைவாசிகள் ஆகியோரும் பொதுத்தேர்வை எழுதினர்.
இந்நிலையில் வரும் 10-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.