தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி அனுப்பி இந்தியர்கள் சாதனை படைத்திருப்பதாக ஐ.நா.வின் அங்கமான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து தாயகத்துக்கு ரூ.111.22 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி இந்தியர்கள் உலக அளவில் சாதனை படைத்திருக்கின்றனர்.
ஐ.நா.வின் அங்கமான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு உலக புலம்பெயர்வு அறிக்கை 2024ஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வெளிநாடுகளில் வசித்தும் பணியாற்றியும் வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு 2022-ஆம் ஆண்டு ரூ.111.22 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பியுள்ளனர்.
இதன் மூலம் உலக அளவில் வெளிநாடுகளில் வசித்தும் பணியாற்றியும் வருவோர் தங்கள் தாயகத்துக்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது இதுவே முதல்முறை. இந்தப் பெருமையை பெற்ற முதல் நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்தப் பட்டியலில் மெக்ஸிகோ 2-ஆவது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் மெக்ஸிகோ குடிமக்கள் மூலம் அந்நாட்டுக்கு 2022-ஆம் ஆண்டு 61.10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அதாவது இந்திய மதிப்பில் ரூ.5.10 லட்சம் கோடிக்கும் மேலாக அனுப்பப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவுக்கு 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள் மூலம் 51 பில்லியன் டாலர் அதாவது ரூ.4.25 லட்சம் கோடி கிடைத்துள்ளது.