உத்தரகாண்ட் மாநிலம் கேதார் நாத் கோயில் நடை நாளை திறக்கப்படும் நிலையில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலின் நடை, குளிர்காலத்தை தவிர எஞ்சிய 6 மாதங்கள் மட்டும் திறக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என பத்ரி – கேதார் கோயில் குழு தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கடந்தாண்டு கேதார் நாத் கோயிலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.