நம் உணவில் என்னவெல்லாம் இருக்கலாம் ? என்னவெல்லாம் இருக்கக் கூடாது ? சிறந்த இந்திய உணவு எப்படி இருக்க வேண்டும் ? என்பன போன்ற கேள்விகள் நமக்கு தோன்றும். அதற்கெல்லாம் பதிலாக இந்திய தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் சில பரிந்துரைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அவை என்ன பரிந்துரைகள்? என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியர்களுக்கான உணவுமுறைகள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் குறித்த பரிந்துரைகளை இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) பொது இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பால், ஹைதராபாத்தில் வெளியிட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள( ICMR ) இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் National Institute of Nutrition என்ற தேசிய ஊட்டச் சத்து நிறுவனம்,இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது .
வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி, மற்றும் மாறிவரும் உணவு வகைகள் , உணவு உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் காலத்துக்கேற்ப பரிந்துரைகளைத் தேசிய ஊட்டச் சத்து நிறுவனம் உருவாக்குகிறது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வயதினருக்குமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதற்கும், உணவுப் பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்கும், உதவி செய்கிறது இந்த பரிந்துரைகள்.
மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் என்பது, மக்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பரிந்துரைகள் ஆகும்.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியர்களின் உணவுப் பழக்கம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்துள்ளது. அதனாலேயே கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின் இப்போது இந்த பரிந்துரைகள் தயாரிக்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சமச்சீர் உணவோடு ஊட்டச்சத்துக்களையும் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு உடற்பயிற்சி அவசியம் எனச் சொல்லும் இந்த அறிக்கை , சர்க்கரையை குறைக்க வேண்டும் என்று கூறுகிறது . , அந்த பரிந்துரையின் படி, ஒரு நாளைக்கு 20 முதல் 25 கிராம் சர்க்கரையே சரியான அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
புரத தேவைக்காக செயற்கை புரத உணவுப் பொருட்களை கண்டிப்பாக தவிர்ப்பதோடு,அதற்கு மாற்றாக, இயற்கை புரத சத்துக்கள் நிறைந்த தினை,மற்றும் பருப்பு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் முடிந்த அளவுக்கு எண்ணெய் சார்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இப்போது , தினசரி உணவில், 50 முதல் 70 சதவீதம் வரை தானியங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த பரிந்துரையின்படி தானியங்கள் 45 சதவீதம் தான் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒருவர் உட்கொள்ளும் மொத்த கொழுப்பு 30 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கவேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.
மேலும் விலை மற்றும் பிராண்ட் பெயர்களை மட்டுமே நம்பாமல் உணவு பொருட்களின் அட்டவணையைப் படித்து பார்த்து உணவுப் பொருட்களை வாங்குமாறு நுகர்வோரை இந்த அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியர்களுக்கு வரும் நோய்களில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் ஏற்படுவதாக கூறியுள்ள இந்த அறிக்கை, ஆரோக்கியமான உணவுகளே இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களை வெகுவாக குறைக்கும் எனத் தெரிவிக்கிறது. மேலும் இந்த அறிக்கையில் , டைப் 2 வகையான நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை ஆரோக்கியமான உணவுமுறைகளால் தடுக்கலாம்,” என்றும் விளக்கியுள்ளது.
இது மட்டும் இன்றி சமையலுக்கு பயன்படுத்துவதற்கான பாதுகாப்பான சமையல் பாத்திரங்கள் பற்றியும் பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.
சமையலுக்கு ஏர்-ஃபிரையர் மற்றும் கிரானைட் பூசப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ள இந்த அறிக்கையில், 170 டிகிரி வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும்போது நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மண்பானைகளில் சமைப்பது நல்லது என்று கூறியுள்ள அதே வேளையில், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களில் அமில மற்றும் சூடான உணவுப் பொருட்களைச் சமைப்பது ஆரோக்கிய கேடு விளைவிக்கும் என எச்சரிக்கை செய்துள்ளது.
பித்தளை தாமிர பாத்திரங்களும் சமையலுக்கு ஏற்றது என்று கூறியுள்ள நிலையில் மைக்ரோவேவ்களில் சமைப்பதையும் நல்லது என்று குறிப்பிட்டுள்ளது . நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கும் இந்திய தேசிய ஊட்டச் சத்து நிறுவனத்தின் உணவு பரிந்துரைகளுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது .