“இந்தியாவில், இந்து மக்கள் தொகை சரிந்துள்ளது” எனவும், அதே வேளையில் “இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மக்கள் தொகை உயர்ந்துள்ளது” என்றும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஷாமிகா ரவி தலைமையிலான குழு, மதச் சிறுபான்மையினரின் பங்கு – ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வு என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்தியாவில் 1950 முதல் 2015 ஆண்டுக்கான இடைப்பட்ட காலத்தில் இந்துக்கள் மக்கள் தொகை 7 புள்ளி 82 சதவீதம் குறைந்துள்ளது” என்றும்,
அதேவேளையில், “இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 43 புள்ளி 15 சதவீதமும், கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை 2 புள்ளி 36 சதவீதமாக உயர்ந்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், “சீக்கியர்கள் ஒன்று புள்ளி 85 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், சமணர்கள் மற்றும் பார்சிக்களின் மக்கள் தொகை சதவீதம் குறைந்துள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சர்வதேச அளவில், பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து வரும் போக்கு நிலவி வருகிறது” என்றும்,
“அதை ஒட்டியே இந்தியாவிலும் பெரும்பான்மை மக்களின் விகிதம் 7 புள்ளி 82 சதவீதம் குறைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், “இந்த முடிவுகள் பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பிரதிபலிக்கவில்லை” என்றும்,
“பெரும்பான்மை மதப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்தும், சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.