ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்காக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை, மைதானத்திலேயே அணியின் உரிமையாளர் திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதையை இழந்தாரா கே.எல். ராகுல்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைமைப் பண்பை ஏற்றுக்கொண்டால் வளர்ச்சிக்கு பாராட்டும், வீழ்ச்சிக்கு தக்க வெகுமதியும் ஏற்றுக்கொள்வது தான் இயல்பு. ஆனால் நிலைமை கையை மீறி போன பிறகு என்ன நடந்தது என்றே தெரியாத சூழலில் நமது பொறுப்பு நமக்கே கேள்விக்குறியாக மாறும்.
அந்த நிலையில் தான் சிக்கிக் கொண்டு தவிக்கிறார் கே எல் ராகுல். ஐபிஎல் தொடரின் 57 வது லீக் ஆட்டத்தில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பாட் கமின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் மும்பை அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு, கயிற்றின் மேல் நடப்பது போல உயிர்ப்போடு இருக்கும் என்பதால், மும்பை அணியின் வேண்டுதல்களுக்கு இணங்க களமிறங்கியது லக்னோ.
20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்த லக்னோ அணியில், ஆயுஷ் பதோனி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மட்டுமே சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். பேட்டிங்கில் பிளந்து கட்டும் சன் ரைசர்ஸ் அணி, லக்னோ பந்துவீச்சை நாலா பக்கமும் சிதற விட்டது.
வழக்கம் போல டிராவிஸ் ஹெட் effortless பேட்டிங், அபிஷேக் சர்மா இப்படியும் நாம் விளையாடலாம் என மாறி மாறி அடிக்க, 9.3 ஓவர்களில் 166 ரன்கள் இலக்கை, விக்கெட் இழப்பின்றி எட்டியது சன் ரைசர்ஸ் அணி.
கட்டுப்படுத்த இயலாத கே எல் ராகுல் இந்த தோல்விக்கு பிறகு சன் ரைசர்ஸ் அணியை புகழ்ந்து தள்ளினாலும், அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாத லக்னோ அணியின் நிறுவனர் சஞ்சய் கோயங்கே, மைதானத்தில் வைத்தே கே எல் ராகுலை சரமாரியாக திட்டினார்.
விளையாட்டில் வெற்றி, தோல்விகள் சகஜம் என்றாலும், முதலீடு செய்தவர்களுக்கான அதிருப்தி இருக்க செய்யும் தான். இருப்பினும், டிரெஸ்ஸிங் ரூமில் மறைமுகமாக செய்ய வேண்டிய அனைத்தும், வெளிப்படையாக மைதானத்தில் செய்வதா என கேள்வி எழுப்பும் விதமாக சஞ்சய் கோயங்காவின் செயல்பாடுகள் அனைத்து தரப்பினரையும் முகம் சுழிக்க செய்து விட்டது.
என்னதான் இருந்தாலும் கே எல் ராகுலுக்கு என சுயமரியாதை இருக்கிறது அல்லவா, அவரும் என்ன செய்ய முடியும் என கே எல்.ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கிரிக்கெட் வட்டாரம், லக்னோ அணி உரிமையாளர் சஞ்சய் மீது காட்டமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இருப்பினும், கே எல் ராகுல், அவரது இந்த செயல் குறித்து மனம் திறப்பார் என எதிர்பார்த்து கொண்டிருக்கையில், சற்றும் எதிர்பாராமல், கே எல் ராகுல், லக்னோ அணியின் அடுத்து வரும் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்’ன் செயல் இணையத்தில் பெரும் விவாதத்தை முன் வைத்து வரும் நிலையில், கே எல் ராகுல் அணியில் விளையாட மாட்டார் என்ற செய்தி, ஐபிஎல் தொடரில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் கே எல் ராகுல் சுயமரியாதை இழந்ததாக கூறப்படும் நிலையில், அவரே முன்வந்து தான் இனி நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாட மாட்டேன் என சொல்லி விலகி விட வேண்டும் என அவரது ரசிகர்கள் வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.
ஒருவேளை கே எல் ராகுல் விலகினால் அந்த அணியின் கேப்டனாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரன் செயல்படுவார் என ஐபிஎல் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதே சமயம் இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஆக்ஷன் ஆண்டு என்பதால், லக்னோ அணியில் அவர் தக்கவைக்கப்பட மாட்டார் எனவும், ராகுலை மற்ற அணிகள் எடுக்க விருப்பம் காட்டும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.