சென்னையில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு, இணையதளம் வழியாக உரிமம் பெறுவது தொடர்பான வழிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில். செல்லப் பிராணிகளின் உரிமம் என்பதனை கிளிக் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அதில் தங்களது விவரங்கள் மற்றும் நான்கு இலக்க எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தங்களது அலைபேசி எண்ணையும், நான்கு இலக்க எண்ணையும் பயன்படுத்தி உள்ளே நுழைந்து, புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் என்பதை கிளிக் செய்ய வேண்டும் எனவும், செல்லப்பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி, சான்றின் புகைப்படம், செல்லப்பிராணியின் புகைப்படம் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்குள்ளாக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகிவற்றை பதிவேற்றம் செய்து உறுதிமொழி அளித்த பின்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,
இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள வழியாக 50 ரூபாய் பணம் செலுத்தி, செல்லப்பிராணிகளின் உரிமத்தை உரிமையாளர்கள் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும்,
ஆண்டுதோறும், தங்களது செல்லப்பிராணிகள் உரிமத்தை இணையவழியில் பெற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.