எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தேர்தல்கள் முக்கியமானவை என்றாலும் , பிரபல நடிகரும் , ஜன சேனா கட்சியின் நிறுவனத் தலைவருமான பவன் கல்யாணுக்கு இந்த தேர்தல், அவரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தேர்தலாக மாறியிருக்கிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…!
வரும் 13ம் தேதி, ஆந்திர மாநிலம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் போட்டியிடுவதால் அந்த சட்டமன்றத் தொகுதி நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது.
அங்கு YSR காங்கிரஸ் கட்சியின் சார்பில் வங்கா கீதா விஸ்வநாத் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பவன்கல்யாணும் , தொகுதியைத் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் YSR காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களத்தில் இருக்கின்றன.
இப்போதே யார் ஜெயிப்பார்கள் ? என்று பந்தயம் கட்டும் அளவுக்கு தொகுதி மக்களும் பரபரப்பாக இருக்கிறார்கள். அரசியலுக்கு வந்த நாளில் இருந்து இதுவரை தேர்தல் வெற்றியைப் பார்க்காத பவன் கல்யாணுக்கு இந்த தேர்தல் பலப்பரீட்சை தான்.
பவர் ஸ்டார் என்று தெலுங்கு திரை ரசிகர்களால் புகழப் படும் பவன் கல்யாணின் அரசியல் வாழ்க்கை , அவரின் சகோதரர் ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியிலிருந்து தான் தொடங்கியது.
பிறகு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி , ஜனசேனா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பவன் கல்யாண், அதே ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்தார்.
அந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் NDA கூட்டணியில் தான் இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிக்க, ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியைப் பிடித்தது.
இந்த வெற்றியைத் தனது அரசியல் வெற்றியாக கருதிய பவன் கல்யாண், 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில், பகுஜன் சமாஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணியுடன் ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து களமிறங்கினார்.
பீமாவரம் ,கஜூவாகா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட பவன் கல்யாண் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில், ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வெற்றிபெற்ற அவரின் ஜன சேனா கட்சிக்கு 6 சதவீத வாக்குகளே கிடைத்தன.
இந்த முறை, வெற்றியை உறுதி படுத்தும் விதமாக, தனது சமூகமான கபு சமூகத்தினர் அதிகம் வாழும் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் .
ஜெகன் மோகன் ரெட்டியும் YSR காங்கிரஸ் சார்பில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டம் டோராபாபுவுக்குப் பதிலாக வங்கா கீதாவை பவன் கல்யாணை எதிர்த்துப் போட்டியிட வைத்துள்ளார் . பிதாபுரம் தொகுதியை உள்ளடக்கிய காக்கிநாடா நாடாளுமன்ற உறுப்பினரான இவரும் கபு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கூப்பிடும் தொலைவில் உள்ளூரிலேயே இருக்கும் வங்கா கீதா , ‘பவனுக்கு வாக்களித்தால் அவர் தேர்தல் முடிந்ததும் உள்ளூரில் இருக்க மாட்டார். வாக்களித்த மக்களை மறந்து விட்டு ஹைதராபாத் சென்று திரைப்படம் எடுப்பார்’ என்ற ரீதியில் பவனுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் செல்வாக்கு மற்றும் தெலுங்கு தேச கட்சியின் செல்வாக்கு இரண்டும் பவன் கல்யாணுக்கு மிகப் பெரிய பலமாக உள்ளன.
ஜன சேனா கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமில்லாமல் தொண்டர்களும் பம்பரமாக சுற்றி தேர்தல் பணியாற்றிவரும் நிலையில், தெலுங்கு திரைப்படத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் பவன் கல்யாணுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள்.
குறிப்பாக , நடிகர் அல்லு அர்ஜுன் , நடிகர் நானி போன்றோர் , தங்களது ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஹனுமன் ஜெயந்தி அன்று வேட்புமனு தாக்கல் செய்த பவன் கல்யாணுக்கு மக்கள் செல்வாக்கு கூடி வருவதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள் .
தனது வாராகி வாகனத்தால் , ஜெகன் மோகன் ரெட்டியின் வேட்பாளரை வீழ்த்தி, தனது அரசியல் பயணத்தில் முதல் தேர்தல் வெற்றியை பெறுவாரா ? என்பதை மக்கள் வாக்குகளே தீர்மானிக்கப் போகிறது.