சென்னை மாதவரத்திலிருந்து எண்ணூர் வரை புதிய வழித்தடத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையையும், பொதுமக்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன
தற்போது, சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் – சென்னை சென்ட்ரல் வரையிலும், இரு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனையடுத்து, மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க, இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பில் 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாதவரத்தில் இருந்து விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரையிலான 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான ஒப்பந்தப்புள்ளி விரைவில் வெளியிடப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட உள்ள 3 வழித்தடங்கள் மூலம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.