இப்போதெல்லாம் நாடு முழுவதும் ஆன் லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. UPI மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் காரணமாக, 75% இந்தியர்கள் அதிக அளவில் செலவுகள் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் இந்தியாவில் UPI மூலம் பணபரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாகி விட்டது.
எந்த பொருள் வாங்கினாலும், ஒரு ரூபாயில் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை UPI பணப்பரிவர்த்தனை மூலம் அதற்கான பணத்தைச் செலுத்த மக்கள் பழகி விட்டார்கள். நேரம் விரையம் ஆவதில்லை.
ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கு இருந்தாலும் உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. எங்கு சென்றாலும், கையில் பணத்தை எடுத்துச் செல்லவேண்டியதில்லை. போன் இருந்தால் போதுமானது. எனவே, பெரும்பாலான இந்திய மக்கள் UPI மூலம் பணம் செலுத்துவதையே விரும்புகிறார்கள்.
இதன் காரணமாக உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கும் ஒரு நாடாக இந்தியா மாறி இருக்கிறது.
இவ்வாறு UPI மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பாக, இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஆய்வு செய்து, அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியரான துருவ் குமார் மற்றும் அவரது இரண்டு மாணவர்களான ஹர்ஷல் தேவ் மற்றும் ராஜ் குப்தா ஆகியோர் UPI உண்மையில் மக்களின் செலவுப் பழக்கத்தை மாற்றிவிட்டதா என்பதைக் கண்டறிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
அதில், UPI மற்றும் பிற டிஜிட்டல் முறைகளினால் பணம் பரிமாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது என்பதாலேயே, இந்திய மக்களின் செலவு செய்யும் போக்கிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுளள்து என்று இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சுமார் 91.5% மக்கள் UPI மூலம் பணம் செலுத்துவது எளிதாக இருக்கிறது என்று கூறியுள்ள நிலையில், மேலும் 81% மக்கள் நாள்தோறும் UPI முறையை பயன்படுத்தி, சராசரியாக ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
National Payments Corporation of India (NPCI)யின் தகவல் படி . கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் UPI மூலம் 19.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 13.3 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது 2023 ஆண்டை விட , 50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு UPI பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மக்களின் செலவு செய்யும் போக்கு குறித்தும் இந்த ஆய்வு முக்கிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. கைகளில் பணத்தை எடுத்து பயன்படுத்தாத காரணத்தால், அதிக செலவுகளை மேற்கொள்வதாக கூறும் இந்த ஆய்வு அறிக்கை, அந்த செலவுகளில் பெரும்பான்மை தேவைற்ற செலவுகளாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 75% மக்கள் UPI மற்றும் பிற DIGITAL PAYMENT முறைகளை பயன்படுத்துவதன் மூலம் அதிகமாக செலவு செய்கின்றனர் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
UPI மீதான முழு திருப்தி இருந்தபோதிலும், பட்ஜெட் கடைப்பிடிப்பதற்கும் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக இருப்பதைப் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
UPI பண பரிமாற்றம் மக்களை அதிகமாகச் செலவழிக்க வைத்திருந்தாலும், சிறு மற்றும் குறுந் தொழில், சில்லறை வியாபாரம் செய்பவர்கள், தங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும் UPI பணபரிமாற்ற முறை நிச்சயமாக உதவுகிறது என்று தெரிவித்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை UPI பண பரிமாற்றத்தின் காரணமாக இந்திய மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிக் கொண்டு வந்துள்ளதோடு, பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கி விட்டது என்றே சொல்லலாம்.