சீன எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு கருதி, உள் கட்டமைப்புக்களை இந்தியா தொடந்து மேம்படுத்திக் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது, சீன எல்லையில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 கோடி ரூபாய் செலவில் சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
வாழ்வாதார வசதியின்மை காரணமாக, இந்தியாவின் எல்லையோரக் கிராமங்களில் உள்ள மக்கள் புலம்பெயர்ந்து விட்டால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். எனவே எல்லையோர கிராமங்களை புவியியல் ரீதியாக மட்டுமின்றி, வசதிகளின் அடிப்படையிலும் முதல் தர கிராமங்களாக உயர்த்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி, டேராடூனில் நடைபெற்ற இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் 62 வது ரைசிங் தின அணிவகுப்பில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைப் பகுதிகளை மேம்படுத்தாமல் நாடு பாதுகாப்பாக இருக்க முடியாது.
எனவே , துடிப்பான கிராமத் திட்டத்தின் மூலம் (விவிபி) எல்லையோரக் கிராமங்களில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
‘ 2014 ஆம் ஆண்டுக்கு முன், எல்லை உள்கட்டமைப்புக்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டது.
ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின், ஆண்டொன்றுக்கு சராசரியாக 12,340 கோடி ரூபாய் செலவில் நாட்டின் எல்லை பகுதிகள் மேம்படுத்தப் பட்டன’ என்று கூறிய அமித் ஷா,
சீன எல்லையில் இதுவரை இணைப்பு இல்லாத 168 கிராமங்கள் அடுத்த ஓராண்டில் சாலை மற்றும் பிற தகவல் தொடர்பு வசதிகள் மூலம் ஒருங்கிணைக்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களில் , சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 113 சாலைகள் மேம் பாட்டுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இந்த எல்லையில் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோமீட்டர் சாலைக்கும் 2 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழிக்க, மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின் படி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் 119 கோடி ரூபாய் செலவில் 43.96 கிலோமீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
அதே போல், சிக்கிம் மாநிலத்தின், வடக்கில் உள்ள சுங்தாங் மற்றும் மங்கன் தொகுதிகளில் துடிப்பான கிராமத் திட்டத்தின் கீழ், சுமார் 18.73 கிலோமீட்டர் சாலைகள் 2.4 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் படவுள்ளன.
மேலும் சிக்கிம் மாநிலத்தில், 96 கோடி ரூபாய் செலவில், 350 மீட்டருக்கு இரும்புப் பாலங்கள் அமைக்கப் படுகின்றன.
துடிப்பான கிராமத் திட்டத்தின் கீழ் எல்லையோரச் சாலைப் பணிகள் நடைபெறுவதை,அந்தந்த மாநில அரசுகள், கட்டுமான நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் ஜிபிஎஸ் அமைப்பை நிறுவுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி, அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் லடாக் ஆகிய 19 மாவட்டங்களின் 46 எல்லைப் பகுதிகளில் 2,967 கிராமங்களை உள்ளடக்கிய (VVP) VIBRANT VILLAGE PROGRAMME திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி, அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மானியங்களுக்கான கோரிக்கைகள் பற்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை, இந்தியாவின் எல்லையோரக் கிராம மக்களின் புலம்பெயர்வைத் தடுத்து அவர்களை அங்கேயே தங்க வைப்பதால், எல்லையோர கிராம மக்களிடம் இருந்து உளவுத் தகவல்களைச் சேகரிக்கவும் வழிவகை செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
முதற்கட்டமாக, துடிப்பான கிராமத் திட்டத்தில், தேர்ந்தெடுக்கப் பட்ட மொத்த கிராமங்களில் சுமார் 68 சதவீத கிராமங்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ளன. லடாக்கில் 35 கிராமங்களும், இமாச்சலப் பிரதேசத்தில் 75 கிராமங்களும், சிக்கிமில் 46 கிராமங்களும், உத்தரகாண்டில் 51 கிராமங்களும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
2023-24, 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில், இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 4,800 கோடி ரூபாயில் 2,500 கோடி ரூபாய்க்கும் மேல் எல்லையோரச் சாலைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முன்னதாக 2022 ஆம் ஆண்டு, உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரே உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் உள்ள கிராமங்களை சீனா விரிவுபடுத்தியது என்பது குறிப்பிடத் தக்கது.