2023-2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 900 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுவதாக ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 700 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலை மாறி உலக அளவில் உச்சத்தைத் தொட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025ம் நிதியாண்டிற்கான நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக ஆகக் குறையும் என்று உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
செங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொள்ளையர் தாக்குதல் காரணமாக பல நாடுகளின் ஏற்றுமதி வருவாய் வெகுவாக குறைந்துள்ள போதிலும், இந்தியா ஏற்றுமதித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐரோப்பிய நாடுகளுக்கான தேவைகளில் சரிவு ஏற்பட்ட நிலையிலும், லத்தீன் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை இந்தியா தொடங்கியிருப்பதை முக்கிய வெற்றியாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO) இயக்குநர் அஜய் சஹாய் கூறும் போது, இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதி 500 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வளரும் என்றும் அதேபோல் , சேவைகள் ஏற்றுமதியும் 400 பில்லியன் அமெரிக்க டாலராக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 238 நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில்,115 நாடுகளுக்கான சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் , 46.5 சதவீதம், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சீனா,பிரிட்டன், சவூதி அரேபியா, சிங்கப்பூர்,வங்கதேசம், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 115 நாடுகளிலிருந்து கிடைக்கிறது என்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மென்பொருள் துறை உள்ளிட்ட சேவை துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, சரக்கு ஏற்றுமதியில் கவனம் செலுத்த தொடங்கியது என்று தெரிவிக்கும் அந்த அறிக்கையில், பொறியியல், மின் சாதனங்கள், மருந்துகள், பருத்திநூல், துணிகள், கைத்தறி பொருட்கள் போன்ற 17 துறைகளின் பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் மருந்து துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர தொடங்கியிருப்பதைக் குறிப்பிடும் ஏற்றுமதித் துறையைச் சார்ந்த வல்லுநர்கள், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதாகவும், அது நடக்கும் நேரத்தில், இந்தியாவின் ஏற்றுமதி வருவாய் இன்னும் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆடைகள் துறையைப் பொறுத்தவரை, அமெரிக்கா, பிரிட்டன் என்று மட்டும் இல்லாமல், பிரேசில், போலந்து மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முயற்சி எடுத்திருப்பதாக, அந்த துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
சுற்றுலா துறையிலும் குறிப்பாக கோயில் மற்றும் கலாச்சார சுற்றுலா துறை மூலமும் இந்தியா தனது ஏற்றுமதி வருவாயை உயர்த்தி வருவதைச் சுட்டிக்காட்டும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO) இயக்குநர் அஜய் சஹாய், பாரம்பரிய முறைகளை விட்டு விலகி, மதிப்புக் கூட்டிய பொருட்கள், புதிய யுக்திகளைப் பயன்படுத்தி இந்தியா ஏற்றுமதி துறையில் வெற்றி பாதையில் செல்கிறது என்று விளக்கியுள்ளார்.
2030ம் ஆண்டிற்குள் இரண்டு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, சேவை ஏற்றுமதியோடு, மின்னணுவியல், பொறியியல், மருந்து மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ள அனைத்து துறைகளின் ஏற்றுமதியாளர்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள், இதை பார்க்கும் போது ,2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவது நிச்சயம் என்று தெரிவித்திருக்கின்றனர்.