இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரியை மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதை வடிவமைத்த சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..!
சாலைப் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா உட்பட உலக நாடுகள், தொடர்ந்து புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும் ,அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதிலும் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகம்.
வெறும் கனவு என்று சொல்லப்பட்ட பறக்கும் டாக்சியை சாத்தியமாக்கி இருக்கிறது சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம். மேலும் அடுத்த ஆண்டுக்குள் இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
eVTOL (Electric Vertical Takeoff and Landing) பறக்கும் டாக்சியை e-Plane என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தியாவின் முதல் கச்சிதமான பறக்கும் மின்சார டாக்ஸியை உருவாக்கும் நோக்கத்துடன், 2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியின் முன்னாள் பொறியியல் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தியால் ePlane நிறுவனம், சென்னை ஐஐடியில் தொடங்கப் பட்டது.
எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) விமானங்களின் டெவலப்பரான ePlane நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) வடிவமைப்பு அமைப்பு ஒப்புதலை (DOA) பெற்றுள்ள பறக்கும் டாக்சி, மக்கள் பயன்பாட்டுக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.
நகர்ப்புறங்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள e200 என்ற இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியில் இருவர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கும் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தி, சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியுடன் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரியை, ஒரு தடவை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர்,இந்த டாக்சி தரையில் இறங்கவும், மீண்டும் கிளம்பவும்,15 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது என்றும் விளக்கியுள்ளார். இது பயன்பாட்டுக்கு வந்த பின், 25 கிலோமீட்டர் துாரத்தை வெறும் 10 நிமிடங்களிலேயே சென்று சேர்ந்து விடலாம்.
சென்னை ஐஐடியின் இந்த அளப்பரிய முயற்சிக்கு, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள மகேந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகேந்திரா, “சென்னை ஐஐடி உருவாக்கிய பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை காரணமாக, இனி புதுமைப் படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என யாராலும் கூற முடியாது” என்றும் தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகேந்திரா பதிவு செய்துள்ளார்.