உடல் நலக்குறைவால் உயிரிழந்த நாகை எம்பி செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான சித்தமல்லி கிராமத்திற்கு, செல்வராஜின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, செல்வராஜின் உடல் அவரது வீட்டிற்கு அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.