அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள இந்தியர்களுக்கான உணவுமுறை விதிமுறைகளில் , நான் ஸ்டிக் பாத்திரங்களில் 170 டிகிரி செல்சியசுக்கு மேல் சூடாக்கி, அதிக வெப்பத்தில் சமைப்பது நல்லதல்ல என்று தெரிவித்திருந்தது.
ஏன் அப்படி ஒரு எச்சரிக்கையை ICMR சொல்லியிருக்கிறது ? நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானதா ? புற்றுநோய் வருமா ?
இது பற்றி தற்போது பார்க்கலாம்.
ஒருகாலத்தில் மண் பண்டங்களில் சமைத்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக பித்தளை, வெண்கலம், இரும்பு,ஈயம்,எவர்சில்வர் என மாறி மாறி, இப்போது நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் பழக்கம் வந்துவிட்டது. முதன்முதலில் 1930களில் உருவாக்கப்பட்டது தான் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்.
சமைக்கும் நேரம் மிச்சமாகிறது என்பதாலும், சுத்தமாக மேற்பரப்பினால் ஒட்டவே ஒட்டாது என்பதாலும், பாத்திரத்தின் அடியும் பிடிக்காது, கழுவவதும் மிக சுலபம் என்பதாலும், சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதுமானது என்பதாலும், நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
ஆனால், பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட அபாயகரமான இரசாயனத்தைக் கொண்ட டெஃப்ளானைப் பயன்படுத்தி நான் ஸ்டிக் பான்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த இரசாயனத்தில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் உள்ளது என்பது பல ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வேதிப்பொருளே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவை விஷமாக மாற்றிவிடுகிறது. குறிப்பாக, இது கணையத்தைப் பாதிப்பதால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2013 ஆம் ஆண்டில் இந்த வேதியியல் பொருளே சில புற்றுநோய்கள், தைராய்டு பிரச்சினைகள் மற்றும் கருப்பை பிரச்சனைகள், குழந்தையின்மை பிரச்சனைகள் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஊட்டச்சத்து நிறுவனம் எச்சரித்திருந்தது.
அப்படியானால் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த கூடாதா என்றால் அதற்கு, வேறுவிதமான பதிலைத் தருகிறது ஆய்வுகள்.
ஒரு கீறல் அல்லது ஒரு வெடிப்பு உள்ள நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போதுதான், அதுவும் 170 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது தான், பாத்திரத்தில் உள்ள டெஃப்ளான் என்ற வேதிப்பொருள் அதிக அளவு நச்சுப் புகை மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை உணவில் கலந்து விடுகிறது.
இதன் காரணமாகவே நான் ஸ்டிக்கில் சமைத்தால், புற்றுநோய் , நுரையீரல் பிரச்சனைகள், போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள் மட்டுமில்லாமல் ஹார்மோன் குரோபாடுகள் போன்ற நோய்களும் வரலாம் என்று என்று ICMR அறிக்கை கூறுகிறது.
மேலும், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களில் அமில மற்றும் சூடான உணவுப் பொருட்களை சமைத்து உண்பதும் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்றும் ICMR அந்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. இதில் தான் சமைப்பது என்ற கேள்விக்கும் ICMR பதில் சொல்லி இருக்கிறது.
சுத்தம் செய்யப்பட்ட பீங்கான் சமையல் பாத்திரங்கள் பாதுகாப்பானது என்று கூறியுள்ள ICMR,
Perfluorooctanoic Acid (PFOA) , perfluorooctane sulfonic acid (PFOS) மற்றும் Polytetrafluoroethylene (PTFE) ஆகிய இரசாயன பூச்சுகள் இல்லாத கிரானைட் கல் பாத்திரங்களில் சமைப்பதும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளது.
மண் பாண்டங்களில் சமைப்பது தான், 100 சதவீதம் பாதுகாப்பான சமையல் என்று அந்த ICMR ஆய்வறிக்கை திட்டவட்டமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.