சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில், மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நீர் சத்து குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் இளநீரை, இருதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீ மற்றும் காபியில் உள்ள புத்துணர்வு ஊட்டக் கூடிய வேதிப்பொருளான காஃபின், மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது என்றும், சராசரியாக ஒரு நாளில் உடலில் 300 மில்லி கிராம் காஃபின் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும், உடலுக்கு செல்லும் இரும்பு சத்துக்கள் தடைப்படக் கூடும் என்பதால், உணவருந்துவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மற்றும் பின்பு டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.