யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொட்ர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : வனத்துறையின் சிறப்புக்குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, முதுமலை ஆகிய வனச்சரகங்களை ஒட்டிய சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடங்களை அடையாளம் காணுதல், யானைகளுக்கான நீர் ஆதாரம் உள்ளிட்டவைகள் அத்தியாவசியமானது என்றாலும், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் மலைவாழ் பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை கடும் கண்டத்திற்குரியது.
வனத்துறை மூலமாக தயாரிக்கப்பட்ட யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை, ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதோடு, அதற்கான கருத்துக்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு குறுகிய அளவு கால அவகாசம் மட்டுமே வழங்கியிருப்பது பன்னெடுங்காலமாக மலைப்பகுதிகளில் வசித்து வரும் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் செயலாகும்.
எனவே, தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து, உரிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.