சீர்காழி அருகே ஓடும் அரசு பேருந்தின் வலப்புற சக்கரம் கழன்று ஓடியதை பார்த்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தமிழகத்தில் சமீபகாலமாக அரசு பேருந்துகள் சிதிலமடைந்து சாலையில் அபாயகரமான முறையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் வாடிக்கையாகி வருகிறது. உதாரணமாக அரசு பேருந்து ஒன்று பின்பக்க கண்ணாடி இன்றி செல்வது, பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே படிக்கட்டு தனியாக கழன்று விழுவது, பேருந்தின் உள்ளே மழை பெய்வது என அரசு பேருந்துகள் பொதுமக்கள் மத்தியில் தொடர் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடரங்கம் கிராமம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் சக்கரம் கழண்டோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுப்போக்குவரத்தை மட்டும் நம்பியிருக்கும் பொதுமக்களின் உயிருக்கு அரசு உத்தரவாதம் கொடுக்குமா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.