வைரஸ் நோய் பொதுவாக, வானிலை மாறும்போது, ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட ஏதாவது ஒருவகையில் மனிதனுக்கு ஏற்படும். தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
க்யூலக்ஸ் வகை கொசுக்கலால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ், முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு உகண்டா நாட்டில் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பின்னர் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால், ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாக வெஸ்ட் நைல் வைரஸ் பரவுவதில்லை.
இந்த வகை வைரஸ் தாக்கம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்குஆசியா பகுதிகளில் பரவலாக உள்ளது. இந்தியாவில், கேரளா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல், வாந்தி, உடல் வலி ஏற்படும் என்றும், ஒரு சிலருக்கு கோமா, பக்கவாதம். மூளை காய்ச்சல் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம், இந்த வைரஸால் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும், 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறிகளும் காணப்படுவதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெஸ்ட் நைல் வைரஸால், தமிழகத்தில் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம்.
இந்த வைரஸ் தாக்குதலை எலைசா மற்றும் RTPCR பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம் என்பதால், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், நீர் மற்றும் திரவ உணவுகளை அதிகமாக எடுத்த கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்படி எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ் பரவலை தடுக்க, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிப்பதுடன், வீடுகளை சுற்றி சுத்தமாகவும் நீர் தேங்காமலும் வைத்திருந்தாலே போதும் என தமிழக சுகாதாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.