சென்னையில், மாநகராட்சி அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023ன்படி, சாலைகளில் விளம்பர பலகைகள், பதாகைகள் வைத்துக்கொள்ள, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதனையடுத்து சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சாலையோரம், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லுாரிகள், பேருந்து நிறுத்தங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பேனர்கள் அமைக்க 20 அடி அகலம், 12 அடி உயரம் என்பதே அதிகபட்ச அளவாக இருக்க வேண்டும் என்றும் சாலையின் சிக்னல்களில் அமைக்கக் கூடாது எனவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன..
இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் சென்னையில் அனுமதியின்றியும், உரிய அளவீடுகளை தாண்டியும் வைக்கப்பட்டிருந்த 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி அகற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.