டெல்லி கலால் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததற்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
முன்னதாக, தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, கலால் கொள்கை மூலம் பெறப்பட்ட பணம் ஹவாலா வாயிலாக ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றதற்கான முகாந்திரம் இருப்பதாக வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதேசமயம், கெஜ்ரிவால் ஜாமீன் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை அணுகுவதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.