குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான அஸ்வின் என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
தென்காசி மற்றும் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யாரும் எதிர்பாராத வகையில், அஸ்வின் என்ற சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து சிறுவன் அஸ்வினை சடலமாக மீட்டுள்ளனர்.
மேலும், குற்றாலம் வெள்ளப்பெருக்கில் சிக்கிய நான்கு சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தில் வேறு சிலர் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதனிடையே, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும், அருவியில் நீராட அனுமதித்ததே இந்த துயரத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் நேரில் ஆய்வு செய்தார். மேலும் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.