மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த கொலை முயற்சிக்கான பின்னணி காரணம் ? என்ன? என்பதை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு…!
ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமராக இருப்பவர் ராபர்ட் ஃபிகோ. 59 வயதாகும் இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமராகி, அந்நாட்டின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருப்பவர் என்ற சாதனையைப் படைத்தவர்.
தனது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகைக்கு ஆதரவாக மாற்றியதாக, குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசியல் அனுபவமிக்க பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதுதான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது .
ராபர்ட் ஃபிகோ கடந்த ஆண்டு மீண்டும் பதவிக்கு பதவிக்கு வந்த ஆறு மாதங்களில், அவரும் அவரது கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து ஸ்லோவாக்கியாவின் பல முக்கியமான அரசு நிறுவனங்களை மூட முடிவெடுத்தனர்.
முதலாவதாக ,குற்றவியல் நீதி முறையின் சீர்திருத்தத்தில், கடுமையான குற்றம் மற்றும் ஊழலை விசாரிக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் அலுவலகம் ஒழிக்கப்பட்டது.
தேசிய ஒளிபரப்பு நிறுவனம் – RTVS – ஜூன் மாதம் மூடப்பட்டது , புதிய இயக்குனருடன் புதிய அமைப்பு தொடங்க முடிவெடுக்கப் பட்டது.
RTVS ஸை ஒழிக்கும் நடவடிக்கை ஸ்லோவாக்கியாவில் ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரும் இழப்பாக இருக்கும் என்று எதிர்கட்சிகளும், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் எச்சரித்த நிலையில், பிரதமர் ராபர்ட் ஃபிகோ அந்த முடிவில் உறுதியாக இருந்தார்.
ஸ்லோவாக்கியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான RTVS என்ற அரசு செய்தி ஒளிபரப்பு அமைப்பை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதிக்கத் தொடங்கிய நாளில் தான் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஸ்லோவாக்கிய நாட்டு மக்கள், RTVS ஒழிப்பு மற்றும் அரசால் முன்மொழியப்பட்ட சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன.
பிரதமர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலால் அந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.
கடந்த புதன் கிழமை தலைநகர் பிராடிஸ்லாவாவில் இருந்து , 150 கிலோமீட்டர் தூரத்தில் ஹான்ட்லோவா ஊரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்களிடம் ராபர்ட் ஃபிகோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் முன் வரிசையில் நின்ற ஒரு நபர் மீது சரமாரியாக சுட்டார்.
பரபரப்பான அந்த சூழலில் இருந்து, பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றனர். அதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அங்கிருந்து பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் பிரதமரை துப்பாக்கியால் சுட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இத்தகவலைப் பிரதமரின் அரசியல் கொள்கைகளுக்கு தீவிர எதிர்ப்பாளரான , தற்போது பதவிக்காலம் முடிவடைய உள்ள அதிபரான ஸுஸானா கபுடோவா, தொலைக்காட்சி மூலம் நாடு மக்களுக்கு அறிவித்தார். மேலும் இந்த தாக்குதல் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.
71 வயதான எழுத்தாளர் மற்றும் கவிஞர் தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போல , புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீட்டர் பெல்லரினியும் கண்டித்திருப்பதுடன், நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத சம்பவம் இது என்றும் தெரிவித்துளளார்.
ஸ்லோவாக்கியா நாட்டின் உள்துறை மந்திரி Matus Sutaj Estok, மாடஸ் சுதாஜ் எஸ்டோகா, இது அரசியல் உள்நோக்கம் கொண்ட படுகொலை முயற்சி என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்நிலையில், ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி இருப்பது ஐரோப்பியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு ரஷ்ய அதிபர் புதின் ,அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எப்போதுமே சர்ச்சைக்குரிய நபராகவே அறியப்படும் ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதோடு, உக்ரைனுக்கு இராணுவ உதவியை நிறுத்துவதற்கான முன் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
முக்கியமான ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக, ஸ்லோவாக்கியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஐரோப்பிய தேர்தல்களைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.