பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை நீதிமன்றம், ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பீலா.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் தமிழக காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ராஜேஷ் தாசை கைது செய்யக் கூடாது என இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், வழக்கை வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.