2019ம் ஆண்டு 78,000ம் ஆக இருந்த தமிழகத்தில் புற்றுநோயின் தாக்கம் , 2023ம் ஆண்டு 83,000 ஆம் ஆக அதிகரித்துள்ளது. 15 வயது முதல் 39 வயது வரையிலான இளம்வயதினரிடம் தான் புற்றுநோயின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று தமிழக புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பெருங் கவலையை ஏற்படுத்தும் இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
தமிழகத்தின் புற்றுநோயின் தாக்கம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல அதிர்ச்சித் தரும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கடந்த ஜனவரியில் , தமிழக புற்றுநோய் பதிவேடு வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில்,
தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களுக்கு வயிற்று புற்றுநோயும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிகளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது .
2024 ஆம் ஆண்டு, உலக புற்று நோய் தினமான பிப்ரவரி 3ம் தேதி , மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி, இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு வரை பதினான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள 5 நகர்ப்புறங்களில் பதிவான புற்றுநோய் பரிசோதனைகளில், 5.3 சதவீதத்தினர் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், இன்னொரு புறம் புற்று யால் பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் மேலும் சிக்கலை ஏற்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள 15 முதல் 39 வயது வரை உள்ள இளம்வயதினரிடம் குறிப்பாக 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் பெரும்பாலும் இரத்த புற்றுநோய்கள் மற்றும் மூளை புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
30 வயது முதல் 39 வயதுக்குட்பட்டவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய் , வாய் புற்றுநோய் மற்றும் நாக்கு புற்றுநோய் ஆகியவையே அதிகம் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் புற்றுநோய் ஆரம்பநிலைகளில் பரிசோதனை செய்யாமல் புறக்கணிக்கப்பட்டு பின் ஒருவேளை குழந்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப் படுகிறது. அப்போதும் கண்டுப்பிடிக்கப் படாமல் இருந்தால், நோய் முற்றிய நிலையில் தான் கண்டறியப்படுகிறது.
இவ்வாறு கூறும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணரான மூத்த மருத்துவர் ஸ்ரீனிவாஸ் சிலுக்குரி, வயது வந்தவர்களோடு ஒப்பிடும் போது புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே அதிக அளவில் உயிரை இழக்கின்றனர் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
அடுத்த தலைமுறையை உருவாக்கும் வீரியம் மிக்க இளம் வயதினர், புற்றுநோய்க்கு ஆளாகும் போது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதனால் பாதிப்படையும் வாய்ப்புக்கள் மிக அதிகம் என்று கூறும் மருத்துவர்கள், புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நேரத்தில், மனவலிமை இன்றி ,உளவியல் ரீதியாக இளம் பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தம் கவலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
The Madras Metropolitan Tumour Registry (MMTR) தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டின் தரவுகள் படி, 20 வயது முதல் 39 வயது வரை உள்ளோருக்கு வாய் புற்று நோயே அதிகம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் வர ,வேகமாக மாறிவரும் நவீன வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச் சூழலால் ஏற்படும் தாக்கம் ஒரு காரணம் என்றாலும் ,ஒருஇளம் வயதிலேயே பான் மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.அதே போல் புகை பிடித்தல் பழக்கம் மூலமும் மிக அதிகமான இளம் புற்றுநோய் நோயாளிகள் உருவாகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .
திவ்யா ராஜ்குமார், உளவியல் புற்றுநோயியல் துறை, புற்றுநோய் இன்ஸ்டிடியூட், AYA புற்றுநோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களிடையே உள்ள உளவியல் சிக்கல்கள் பன்முகத்தன்மை கொண்டவை மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
புற்று நோய்க்கான சிகிச்சைகள் முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விடுவதில்லை. அதன் பிறகு பலர் நிவாரணம் பல்வேறு வகைகளில் உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
புற்றுநோய் மீண்டும் வருவதைப் பற்றிய கவலைகள் , குடும்ப வாழ்வு குறித்த சந்தேகங்கள், சிகிச்சையின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல் மாற்றங்கள் பற்றிய கவலைகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக செய்த செலவுகள் அதனால் ஏற்பட்ட நிதிச்சுமைகள் என இப்படி பல்வேறுபட்ட கவலைகளும் சவால்களும் புற்றுநோயாளிகளுக்கு ஏற்படுகின்றன.
எனவே , புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நலமாகி வீடு திரும்பியவர்களுக்கான தகுந்த ஆலோசனைகள் வழங்குவதும், புற்றுநோய் குறித்த தவறான கருத்துக்களைக் குறித்து தெளிவு படுத்துவதும், குறிப்பாக இளம்வயதினருக்கு புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகக் கொடிய நோயான புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கிறது என்பதே ஆபத்தான அறிகுறி. அதிலும் இளைஞர்கள் அதிக வாழும் இந்தியாவில் இளம்வயதினரே அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர் என்ற நிலை வளரும் நாட்டுக்கு நல்லதல்ல.
சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தியர்கள் புற்றுநோய்க்கு எதிராக களமிறங்க வேண்டிய நேரம் இது என்றே புற்றுநோய் மருத்துவ அறிஞர்களின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.