பல்லாயிரக்கான திருக்கோயில்கள் அமைந்திருக்கும் தமிழகத்தில் எல்லாக் கோயில்களும் ஏதோ ஒருவகையில் சிறப்புடையது. என்றாலும் கன்னியாகுமரியில் இருக்கும் சுசீந்திரம் கோயில் ஏராளமான சிறப்புக்களை கொண்டுள்ளது. அது பற்றி தற்போது பார்க்கலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான தாணுமாலயன் திருக்கோயில் , கன்னியாகுமரி மாவட்டத்தில் , பழையாறை நதிக்கரையில் சுசீந்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
சிவனைக் குறிக்கும் தாணுவும், விஷ்ணுவைக் குறிக்கும் மாலும், பிரமனைக் குறிக்கும் அயனும் என இங்கே ஒருவருக்கு ஒருவர் இணைந்திருக்கும் வடிவமே தாணுமாலயன் வடிவமாகும்.
முன்னொரு காலத்தில், ஞானாரண்யம் என்று வழங்கப்பட்ட இந்த இடத்தில், அத்தரி முனிவருக்கும் அவர் மனைவிக்கும் சிவபெருமான் இப்படிக் காட்சி அளித்ததாக தலபுராணம் தெரிவிக்கிறது .
சுசீ என்றால் தூய்மை. இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் , இறைவனை இந்திரன் வழிபட்டு பாவம் நீங்கி தூய்மை பெற்றதால், இத்தலம் சுசீந்திரம் என்று அழைக்கப் படுகிறது.
இப்போதும் இந்திரன் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபடுவதாக சொல்லப்படுகிறது. அதனாலேயே , ஒருநாள் இரவு கால அர்த்த ஜாம பூஜை செய்யும் குருக்களே, மறுநாள் காலை உஷத் கால பூஜை செய்யக் கூடாது என்ற வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஊருக்குள் நுழைந்ததுமே 10 அடி பீடத்தில் 7 நிலைகள் கொண்ட 135 அடி உயரமுள்ள ராஜகோபுரம் மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.
இக்கோபுரம் உட்புற சுவர்களில் மூலிகைச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களால் ஆன இராமாயண, மகாபாரத இதிகாச ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
வெளிப்புறத்தில் இராமாயணம், மகாபாரதம், சிவபுராணம் போன்ற ஞானநூல்கள் கதையை விவரிக்கும் சுதை சிற்பங்கள் கடுசர்க்கரை, நவபாஷாணம் போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது.
முழுக்க, முழுக்க கடற்சங்கை மாவாக்கி உருவாக்கப்பட்ட, இந்தக் கோயிலின் நந்தியை, மாக்காளை என்றும்,மகாக்காளை என்றும் அழைக்கப்படுகிறது.
இராமேஸ்வரத்துக்கு அடுத்த படியாக மிகப் பெரிய பிரகாரமும் கொண்ட இக்கோயிலில்,இந்த பிரகாரத்தின் இருபக்கமும் விளக்கேந்திய பாவை சிற்பங்களும் யாளிகளும் காண்பவர் கண்களைப் கவரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வடக்கு பிரகாரத்தில், கலை நுணுக்கம் கொண்ட 24 இசை தூண்களும், தென்புறத்தில் 32 தூண்களும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டுள்ளன. இந்த கல்தூண்கள், தட்டினால் இனிய இசை நாதம் எழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மூன்று தெய்வங்களும் குடியிருப்பதால், அனைத்து வித வேண்டுதல்களும் நிறைவேறும் என்று பக்தர்களால் நம்பப் படுகிறது.
இந்தக் கோயிலில் இறைவியாக அறம்வளர்த்த அம்மன் பற்றி ஒரு வரலாறு காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இது 1444 ஆம் ஆண்டு நடந்த வரலாறு.
சுசீந்திரம் ஊருக்கு அருகில் உள்ள தேரூரில் வாழ்ந்து வந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னிப் பெண் கோயிலுக்கு வந்த நேரத்தில் பிரகாரத்தில் வலம் வந்த போது சுவாமி ஆட்கொண்டு அருளினான். இதனை நினைவு கூறும் விதமாக இன்றும் மாசி மாதத்தில் சுவாமிக்கும் நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.
சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயிலில் சிறப்பு அங்கே இருக்கும் 18அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் தான் . மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது இந்த ஆஞ்சநேயர் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சார்த்தி வழிபட்டால் சனி கிரக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுசீந்திரம் கோயிலில் தான், பெண் வடிவில் கணேசனி என்ற பெயரில் விநாயகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இது வேறெந்த கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சமாகும். இந்த விநாயகர் மட்டுமின்றி, நீலகண்ட விநாயகர், இந்திர விநாயகர் ,ஆதிமூல விநாயகர் , ஆகிய விநாயகர்கள் இக்கோயிலில் இருக்கிறார்கள்.
சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி, கார்த்திகை மாதங்களில் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெறும் இந்த சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால், எல்லா வளங்களும் பெற்று இந்தப் பூமியில் இந்திரன் போல வாழும் யோகம் கிட்டும் என்று சொல்லுகிறார்கள்.