தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என தகவல் வெளியான நிலையில், மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக வலைத்தளங்களில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு புறம்பானது என்று கூறியுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக, மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல, வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளது.
எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கை மக்களை எவ்விதத்திலும் பாதிக்காது என தெரிவித்துள்ளது.
ஆகவே, வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது.