டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் முதல்வர் இல்லத்தில் வரவேற்பு அறையில் வைத்து ஸ்வாதி மாலிவாலிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது தடயவியல் நிபுணர்களும் உடனிருந்தனர்.
முன்னதாக போலீசில் ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரில், தன்னை முதல்வரின் உதவியாளர் கன்னத்தில் எட்டு முறை அறைந்ததாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
விசாரணைக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட பதிவில், 2 நாட்களுக்கு முன்பு உண்மையை ஏற்றுக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, தற்போது பல்டி அடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், தன்னை தாக்கிய முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார், தான் கைது செய்யப்பட்டால் அனைத்து ரகசியங்களையும் வெளியிட்டு விடுவதாக கட்சியை மிரட்டுவதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிபவ் குமாரின் மிரட்டலால் தனது நடத்தையை கட்சி மேலிடம் கேள்வி எழுப்புவதாக வேதனை தெரிவித்த ஸ்வாதி மாலிவால், தானே சுயமாக போராடிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
எவ்வளவுதான் ஒருவரது பண்பைக் கெடுத்தாலும், உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்றும் ஸ்வாதி மாலிவால் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.