பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை மிக பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு வந்தே மெட்ரோ இரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
மும்பையில் நடைபெற்ற விக்சித் பாரத் தூதர் நிகழ்வில் கலந்த கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2014ம் ஆண்டுக்கு முன், காங்கிரஸ் ஆட்சிகளில் ‘கறவை மாடு’ என்று கிண்டல் செய்யப்பட்ட இந்திய ரயில்வே துறை, பிரதமர் மோடி ஆட்சியில் அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
மேலும், மெய்சிலிர்க்க வைக்கும் வகையில், இந்திய ரயில்வே துறையில் என்ன என்ன முன்னேற்றங்கள் நடந்துள்ளன? எப்படி அமைக்கப்பட்டன? எவ்வாறு ஒரு பெரிய பரந்த அளவிலான மின்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்திய இரயில்வே மாற்றப்பட்டது ? என்பதை என்பதை எல்லாம் விரிவான விளக்கக்காட்சிகளுடன் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.
இந்தியாவில் இன்று ஒரு நாளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு இரயில் வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன என்று கூறிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த நிதியாண்டில் மட்டும், சுவிட்சர்லாந்தின் ஒட்டு மொத்த இரயில் தடங்களுக்கு சமமாக 5,300கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவில் இரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில், ஜெர்மன் நாட்டின் மொத்த இரயில் பாதைகளுக்கு சமமாக 31,000 கிலோ மீட்டர் இரயில் வழித்தடங்கள் இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இரயில்வேயின் மின்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலை எடுத்துரைத்த அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 20,000 கிலோ மீட்டருக்கு மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 44,000 கிலோ மீட்டருக்கு ரயில்வே நெட்வொர்க்குகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இந்திய ரயில்வே துறை 100 சதவீத மின்மயமாக்கலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், இதுவரை 95 சதவீதம் மின் மயமாகி விட்டதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 120 ரயில் நிலையங்களுடன், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , வந்தே பாரத் இரயில்கள் மற்றும் புல்லட் ரயில்கள் நாட்டின் முக்கிய வளர்ச்சியாகும் என்று கூறினார்.
மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடியின் முதல் 100 நாள் திட்டத்தில் வந்தே மெட்ரோ இரயில் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே மெட்ரோ இரயில்கள்’, 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை இணைக்கும் ‘வந்தே சேர் கார்’ மற்றும் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் ‘ வந்தே ஸ்லீப்பர் இரயில்கள் ‘ என்று வந்தே பாரத் இரயில்கள் மக்களுக்கான வசதியான பயணத்தை மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதே நேரத்தில் இனி காத்திருப்பு டிக்கெட்டுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருக்கிறார்.
சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நகரங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் மக்கள் சென்றுவர உதவும் ரயில் போக்குவரத்தே நாட்டின் முதுகெலும்பு என்றால் மிகையில்லை .
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் இரயில்வே துறை இவ்வளவு முன்னேற்றங்களை அடைந்துள்ளது நல்ல அறிகுறியே என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.