சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள அவர், கூட்டணி தர்மத்திற்காக மாநிலத்தின் உரிமையை பறிகொடுக்கும் திமுக அரசின் சுயநல செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதியை பூர்த்தி செய்து வரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சேர்த்து மாநில உரிமைகளையும் பாதுகாக்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.