யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் 2 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதுறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக, யூ டியூபர் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க தேனி மாவட்ட போலீசார், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து, நீதிபதி செங்கமலச் செல்வன் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை, 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவை மே 22ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனிடையே சவுக்கு சங்கரை நேர்காணல் செய்து அதனை யூடியூப் சேனலில் வெளியிட்டதாக ரெட் பிக்ஸ் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி அளித்து திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.