ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபரின் மறைவு இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்குப் பேரிழப்பாக அமைகிறது ? இந்தியாவுக்கும் ஈரானுக்கும் உள்ள நட்புறவு எந்த அளவுக்கு ஆழமானது ? அது பற்றி இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம் .
இன்று நேற்று தொடங்கியதில்லை இந்த உறவு. இந்தியாவுக்கும் ஈரானுக்குமான நட்புறவு பல்லாயிரம் ஆண்டு கால பழமையானது. இடைக்காலத்தில் சில விரிசல்கள் வந்தாலும், எப்போதும் ஈரானும் இந்தியாவும் நல்ல நட்பு நாடுகளாகவே இருந்து வருகின்றன.
1950ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவும், ஈரானும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரான் சென்ற அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் , டெஹ்ரான் பிரகனடத்தில் கையெழுத்திட்டார். அப்போதிலிருந்தே இந்தியா, ஈரான் உறவு வலிமை பெறத்தொடங்கியது.
அதன் பிறகு 2003ம் ஆண்டு இந்தியா வந்த ஈரான் அதிபர், இந்திய -ஈரான் கூட்டு வளர்ச்சிக்கு விஷயங்களில் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்திருந்தார்.
இந்தியாவின் பிரதமராக மோடி வந்த பின் ஈரானுடனான இந்தியாவின் உறவு புதிய பரிணாமத்தை எட்டியது. 2016ம் ஆண்டு பிரதமர் மோடி ஈரான் சென்றிருந்தபோது, 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தொடர்ந்து 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய ஈரான் அதிபர் இந்தியாவுக்கு வந்து 13 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ஈரான்-இந்தியா புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார்.
கடந்த 2022ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடந்த மாநாட்டில் முதன் முறையாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியும், பிரதமர் மோடியும் சந்தித்தனர். அதன் பிறகு, ஈரான்- இந்திய அரசு முறை உறவுகள் வேக வேகமாக முன்னேறத் தொடங்கியது.
இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே சிவில் மற்றும் வணிக விஷயங்களில் சட்டஉதவிகள் மட்டுமின்றி, பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்க இருநாடுகளும் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளன.
கடந்த மே 13 ஆம் தேதி, ஈரானின் சபகர் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதன் மூலம் அந்நிய துறைமுகத்தை முதன் முதலாக இந்தியா கைப்பற்றியது.
2015ம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர, அதை ஏற்றுக்கொண்டு ஈரான் சபகர் துறைமுகத்தை இந்தியாவுக்குக் கொடுத்தது.
ஓமன் வளைகுடாவில் உள்ள சபகர் துறைமுகம், பாகிஸ்தானைக் கடந்து செல்லும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை வர்த்தக ரீதியாக இணைக்கும் முக்கிய துறைமுகமாகும்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பாகிஸ்தான் சீனாவுடனான உறவை வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தியா கன கச்சிதமாக ஈரானின் சபகர் துறைமுகத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் துறையில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு அப்பாலும் வர்த்தகத்தை விரிவு படுத்த உதவும் வகையில், பாகிஸ்தானைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல, இந்தியாவுக்கு ஈரான் தன் கடல்வழிப் பாதையை வழங்கியிருக்கிறது. இதன் மூலமாகவே, இந்தியாவுடனான நட்பை உலகத்துக்குப் பறை சாற்றியது ஈரான்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றிந்தார் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி. பின்னர், வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, காஷ்மீர் மீதான ஈரானின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியது.
காஷ்மீர் விவகாரத்தில் ஈரான் தங்களுக்கு ஆதரவளிக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்திருந்த நிலையில் , அந்த கூட்டறிக்கையில், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஏற்பவே, UNSC தீர்மானங்களைத் தவிர்த்து காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் பேரில் எடுக்கப்படும் தீர்வே சரியானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில், இருந்த இந்திய ஊழியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இது, ஈரான், இந்தியா மீது வைத்திருக்கும் மரியாதையைக் குறிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி 2021 ஆண்டு அதிபராக பதவியேற் நிகழ்ச்சியில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அடிக்கடி ஈரானுக்குசென்று வருவதும் இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை எடுத்துக்காட்டுகிறது.
பாரசீக வளைகுடா மண்டலத்தில் , இந்தியாவுக்கு உரிய முக்கியத்துவத்தை ஒருபோதும் ஈரான் விட்டுக் கொடுத்ததில்லை. அதே போல் ஈரானின் உரிமைகளையும் இந்தியா விட்டுக் கொடுத்ததில்லை என்பதாலேயே இந்த உறவு மேலும் மேலும் வளர்ந்து வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்று வரும் நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் மரணம் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில், இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.