ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி உயிரிழந்ததையடுத்து, இந்தியாவில் ஒரு நாள் துக்க நாளாக அனுசரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இதனையடுத்துஈரான் அதிபரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர்மோடி, அவரது மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி உயிரிழந்ததையடுத்து, இந்தியாவில் ஒரு நாள் துக்க நாளாக அனுசரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேசியக் கொடிகள் ஒரு நாள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்நாட்டு விதிகளின்படி, துணை அதிபர் முகமது முக்பர் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.