தமிழ்நாட்டில் கோடை மழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வரும் 24-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனை முன்னிட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4 கோடி மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் பயணிகள், போதிய பாதுகாப்புடன் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.