சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஜாபர் சாதிக் சகோதரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
வெளிநாடுகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில், தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் முகேஷ், முஜிபுர், அசோக்குமார் மற்றும் சதானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், 40 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றியது தொடர்பாக ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.