மதுரையில் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட சோதனை ஓட்டத்தின்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் சாலையில் அருவிபோல கொட்டியது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரப்பாளையம் பகுதியில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் ஏற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
திடீரென குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அருவிபோல் கொட்டி வீணானது. அப்போது சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தண்ணீரில் கழுவ தொடங்கினர்.
தண்ணீர் வெளியேறியது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, முதலில் மழை நீரை வெளியேற்றுவதாக கூறிய அதிகாரிகள், பின்னர் சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.