கடந்த 6 மாதங்களில் சென்னையில் 5 ஊழல் வழக்குகளை மட்டுமே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககம் பதிவு செய்துள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளன.
காவல்துறை உயரதிகாரிகளின் மெத்தனமே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்களை தடுத்து, அதன் மீதான புகார்களை விசாரிக்கும் பணியில் DVAC எனப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக சென்னையில் மட்டும் எட்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவர்கள் கடந்த ஆறு மாதங்களில் ஊழல் தொடர்பாக 5 வழக்குகளை மட்டுமே பதிவு செய்பதுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகி உள்ளன. அதே போல், திருச்சி, கோவை மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் தலா ஐந்து முதல் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் ஒரு தனி இணை இயக்குனர், ஐஜிபி அளவிலான ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் பெரிய ஊழல் வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல், மற்ற மாவட்டங்களில் தலா ஒரு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கக பிரிவு செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, சென்னை ஸ்மார்ட் சிட்டி மற்றும் பேருந்து நிழற்குடை ஊழல், சென்னை கேபி பூங்காவில் தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டியது தொடர்பான ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஆதாரங்களுடன் 20 புகார்கள் தெரிவித்தும், இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
இதன் மூலம் ஊழல்கள் தொடர்பான புகார் வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவது அம்பலமாகியிருப்பதாக தெரிவித்தார்.
சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககத்தால் பதிவு செய்யப்பட்ட FIRகளின் எண்ணிக்கை குறைந்து வருவது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகுப்பாய்வு காட்டுகிறது.
அதன்படி 2019 இல் 74 இல் இருந்து 2023 இல் 31 ஆகவும், 2024 மே 18ஆம் தேதி வரை 4 FIR-க்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், திருச்சி, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை விட, சென்னையில் குறைந்தது 5 மடங்கு வழக்குகள் பதிவு செய்யப்படும்.
அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் 74 வழக்குகளும், மதுரை மற்றும் கோவையில் தலா 22 வழக்குளும், திருச்சியில் 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 2024 ஆம் ஆண்டில், திருச்சியில் 6 வழக்குகள், மதுரையில் 3 மற்றும் கோவையில் ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த மத்திய அரசின் சட்டத்திருத்தத்தின்படி, ஊழல் தொடர்பாக அரசு ஊழியரை விசாரிக்க, உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும். ஆனால், முன் அனுமதி உடனடியாக கிடைக்காததால், ஆய்வுகள் தாமதம் ஏற்படுவதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஒப்புதல் பெறப்பட்ட விசாரணையில் கூட காவல் உயரதிகாரிகள் வழக்குகளைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறுகிறார் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.
தமிழகத்தில் ஊழல் தொடர்பான விசாரணைகள் வெகுவாகக் குறைந்துள்ளது குறித்து மக்கள் சிவில் உரிமைகள் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் வி சுரேஷ் கூறுகையில், குடிமக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டில், மந்த நிலையை இது சுட்டிக்காட்டுகிறது என தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககம், கடந்த 2022-23ஆம் ஆண்டில் 389 விசாரணைகளை நடத்தியது. ஆனால், இதற்கான தரவுகளை இதுவரை DVAC வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.