நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்துவதுதான் திமுக அரசின் மூன்றாண்டு சாதனையா என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 19 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டிருப்பது பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம் இல்லை என்றும், உண்மையில் தலைகுனிய வேண்டிய விஷயம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த 3 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களால் காலியான இடங்களுக்கும் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை எனவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.